அகத்தியர் ஞானம் 2

அகத்தியர் ஞானம் 2 

சொல்லுகிறேன் சூட்க்ஷத்தின் மகிமை கேளு
சுருதி வெளிக் கெட்டாத சூட்சமப்பா
வெல்லுவையோ சொல்லுதற்குப் பிள்ளாய் பிள்ளாய்
வேதாந்தப் பறையுமரை யுள்ளே நின்றாய்
அல்லுபகலற்ற மக மேரு நுனியடியில்
ஆதித்தன் சுடரொளியில் உதித்த பரவெளியில்
நில்லு மயிர்ப் பாலம் நெருப்பாற்றுக்குள்ளே
நேராக அகார நடுக்கொம்பு தானே (1)


இப்பாடலில் அகத்தியர் கூறும் சூட்சம் என்பது பரவுணர்வு. முதலில் அதை சுருதிக்கு எட்டாதது என்கிறார் அவர். சுருதி அல்லது வேதம் என்பது பல்வேறு ரிஷிகள் தாம் பெற்ற பரவுணர்வை வார்த்தைகளால் விளக்கியது. அந்த அனுபவம் வார்த்தைகளால் வடிக்கப்பட்டபோது, ஒரு மொழியின் அளவுக்குட்பட்டமையால் அதனால் அவ்வுணர்வைப் பரிபூரணமாக விளக்க இயலவில்லை. இதையே சுருதிக்கு அப்பாற்பட்டது என்பதால் தெரிவிக்கிறார் அகத்தியர். அந்த உணர்வைப் பற்றி அறியவேண்டும் என்றால் ஒருவர் வேதாந்தத்தினை ஆராய வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார். கர்ம காண்டம் ஞான காண்டம் என்று வேதம் இரு பகுதிகளைக் கொண்டது. இதில் ஞான காண்டம் வேதாந்தம். அது பரவுணர்வைப் பற்றி ஓரளவு விளக்குகிறது. இதை ஒருவர் படித்து ஆராய வேண்டும் பின் தானே அந்த அனுபவத்தைப் பெறவேண்டும் என்று இதற்குப் பொருள்.


இதனை அடுத்து அகத்தியர் இந்த அனுபவம் ஏற்பட முக்கியமான நாடியைக் குறிப்பிடுகிறார். அந்த நாடி சுழுமுனை நாடி. அதனை அவர் அகார கொம்பு என்கிறார். பரவுணர்வைப் பெற முக்கியமான மூன்று நாடிகளான இடை, பிங்கலை, சுழுமுனை நாடிகளில் ஓம்காரத்தின் உகார மகாரங்கள் இடை பிங்களை நாடிகளையும் அகராம் சுழுமுனையையும் குறிக்கின்றன. இங்கு மகாமேருவின் அடியில், உச்சியில் பகல் இரவற்ற இடத்தில் உள்ள மயிர்ப்பாலம் நெருப்பு ஆறு என்று அவர் கூறுகிறார்.


மகாமேரு என்பது நமது தண்டுவடம், பரவுணர்வுப் பாதையில் உள்ள சக்கரங்கள் இந்த தண்டுவடத்தில் நமது சூட்சும உடலில் அமைந்திருக்கின்றன. அவற்றின் ஊடே இடை, பிங்கலை மற்றும் சுழுமுனை நாடிகள் பயணிக்கின்றன. அவை மயிரைப் போல நுண்ணியவை, குண்டலினி சக்தி எனும் நெருப்பு ஆறு பயணிக்கும் பாதை என்கிறார் அகத்தியர்.


சிறுகுறிப்பு: 


இந்திய கலாசாரத்தில் ஒரே வார்த்தை பல பொருள்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய சொற்களில் ஒன்று நாடி என்பது. நாடி என்ற சொல் நடுவில் துளையுள்ள ஒரு குழாயைக் குறிக்கும். சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் பித்த நாடி, வாதநாடி, ச்லேசஷ்ம நாடி என்ற மூன்று நாடிகளும் உடலின் நிலையைக் கண்டறிய சோதிக்கப்படுகின்றன. ஜோதிடத்தில் நாடி என்பது 24 நிமிடங்கள் அல்லது 360 சுவாசங்களைக் குறிக்கும். ஒரு சுவாசம் என்பது பத்து நெடில்களை உச்சரிக்க ஆகும் நேரம். இது ஒரு நாளின் 1/60 பகுதியை, கிரகங்கள் ஒரு நாளில் கடக்கும் 360 டிகிரியில் 6 டிகிரியையும் குறிக்கும். இவ்வாறுதான் அண்டாகாசத்திலும் பிண்டாகாசத்திலும் நேரம் கணக்கிடப்படுகிறது.


யோகத்தில் நாடி என்பது பிராண சக்தி, குண்டலினி சக்தி, பயணிக்கும் ஒரு ஜீவநதியாக உருவகப்படுத்தப்படுகிறது. மனித உடலில் 72,000 நாடிகள் உள்ளன. இவை கண்ணால் காணக்கூடிய குழாய்கள் அல்ல. இவை சூட்சும நிலையில் உள்ளவை. இந்த நாடிகள் உடலில் நாபிக்கு நான்கு இஞ்சுக்கள் கீழே தொடங்குகின்றன. இதைக் கண்ட மூலம் என்று சித்தர்கள் அழைக்கின்றனர். இதையே அகத்தியர் பொதிகை மலை என்கிறார். இங்கிருந்து கீழே இறங்கும் தாமிரபரணி ஆறு என்பது இந்த நாடிகளாகும். இவை ஒரு ஆறு பல கிளைகளாகப் பிரிந்து ஓடுவதைப் போல உடல் முழுவதும் விரவியுள்ளன. இந்த கண்டமூலம் ஒரு ஆமையைப் போல நான்கு இன்ச் அகலமும் இரண்டு இன்ச் உயரமும் கொண்டதாக உடலின் குறுக்கே உள்ளது என்று ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஆமையின் வாயிலிருந்து இரண்டு, வாலிலிருந்து இரண்டு, ஒவ்வொரு காலிலிருந்து ஐந்து என்று மொத்தம் இருபத்து நான்கு நாடிகளாகத் தொடங்கி பலவாக விரிகின்றன.


ஆன்மீக வாழ்க்கையில் ஐந்து நாடிகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. சூத்ர பஞ்சகம் என்படும் அவை, இடை, பிங்கலை, சுழுமுனை, பலா, சுபலா என்பவை ஆகும். இவற்றில் இடை, பிங்களை மற்றும் சுழுமுனை நாடிகள் உடலில் மேல்நோக்கிச் செல்கின்றன. பலாவும் சுபலாவும் கீழ் நோக்கிச் செல்கின்றன. இந்த நாடிகள், ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் நான்கு குழாய்கள் என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. உதாரணமாக சுழுமுனை நாடிக்குள் மூன்று நாடிகள் உள்ளன. அவை வஜ்ரிணி நாடி, சித்ரிணி நாடி, பிரம்ம நாடி என்று அழைக்கப்படுகின்றன. சுழுமுனை நாடி தமோ குணத்தையும், வஜ்ரிணி நாடி ரஜோ குணத்தையும் சித்ரிணி நாடி சத்வ குணத்தையும் பிரம்ம நாடி தூய விழிப்புணர்வையும் குறிப்பதாக யோக நூல்கள் கூறுகின்றன. இந்த பிரம்ம நாடியில் பிராணன், குண்டலினி அக்னியின் துணையுடன் பயணிக்கிறது. அது தனது பாதையில் சக்கரங்கள் எனப்படும் சக்தி மையங்களைச் சந்திக்கிறது. இந்த சக்தி மையங்களில் பிரதானமாக உள்ளவை ஆறு ஆகும். அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சஹஸ்ராரம் என்பவை. இந்த சக்தி மையங்கள் பொதுவாக தாமரை மொட்டு வடிவில் குறிக்கப்படுகின்றன. இவற்றின் ஊடே குண்டலினி சக்தி பயணிக்கும்போது அவை நிமிர்ந்து மலர்கின்றன.
இதைப் பற்றி வேதாந்த நூல்களான மறைகளும் கூறுகின்றன என்கிறார் அகத்தியர். சாதோக்கிய உபநிடதத்தில் “இதயத்தில் நூற்றியொரு நாடிகள் உள்ளன. அவற்றில் ஒன்று சிரசை நோக்கிச் செல்கிறது. இதன் மூலம் பயணிப்பவருக்கு மறுபிறப்பு இல்லை” என்று காணப்படுகிறது (8.6.6). நாடிகளைப் பற்றி முண்டக உபநிடதம், பிரஷ்ண உபநிடதம், மைத்ரீ உபநிடதம் ஆகியவற்றிலும் குறிப்புக்கள் உள்ளன. ஆனால் இந்த குறிப்புக்கள் ஒருவருக்கு குண்டலினியின் விழிப்புணர்வை அளிப்பதில்லை, அவை ஏட்டறிவு மட்டுமே. அந்த விழிப்புணர்வை பெறுவதற்கான செயல்முறை குண்டலினி யோகம் மட்டுமே.


பாடல் 2
கொம்பூணி சுழிமுனைமேல் வாழைத் தார்போல்
குவிந்த முனை முக்கோண மயிர்ப்பார் தன்னில்
சம்பு அரன் பதந்தூக்கி நின்றபர வெளியில்
சாற்றினேன் அறிந்திடுவாய் முன்னே தானே
இன்பமெனுஞ் சுடரிறுகியிறை யளவு காதம்
இருத்தியுயி ரூணியிடவுமெங்கள் பெருமானும்
அம்பெனவும் சுடரொளியாய் நின்ற போது
அரகரா வென முழங்கும் நடனந் தானே


பல சித்தர்கள் இந்த பரவெளியைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளனர். விழிப்புணர்வின் உச்ச நிலையே பரவெளி. அங்கு ஏற்படும் அசைவே நடராஜப் பெருமானின் நடனம். இதையே காஷ்மீர சைவம் “ஸ்பந்தா” என்று அழைக்கிறது.


நடராஜப் பெருமானின் நடனம் அவரது ஐவகைத் தொழில்களையும் குறிக்கின்றது. பாபத்தின் ஹரனான பெருமான், சம்பு எனப்படும் மங்களகரமானவன், சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), லயம் (அழித்தல்), அனுக்ரஹம் (அருளல்), திரோதானம் (மறைத்தல்) என்ற ஐந்து தொழில்களையும் செய்கிறான். அந்த எம்பெருமானின் உருவம் இன்பம் என்னும் சுடர் இறுகி காத அளவு விரிந்தது என்கிறார் அகத்தியர். இறைவனைக் குறிக்கும் தொடர் சத் சித் ஆனந்தம் என்பது. அதில் சத் என்பது இருப்பைக் குறிக்கும். தனது இருப்பைத் தானே உணரும் அறிவு சித் எனப்படுவது. அந்த உணர்தலிலிருந்து எழுவது ஆனந்தம், இன்பம். இந்த ஆனந்தத்தின் வெளிப்பாடு நடராஜப் பெருமானின் நடனம், இந்த புலன்களால் அறியப்படும் உலகம். இவ்வாறு அவனது இன்பத்தின் வெளிப்பாடாகத் தோன்றிய உலகத்தில் அவன் உயிர்களை விதைத்து, ஊணி, வாழச் செய்கிறான். இதுவும் அவனது அன்பெனும் செயலேதான். ஏனெனில் உயிர்கள் இவ்வுலகில் தோன்றினால்தான் தமது கர்மத்தைத் தொலைக்க முடியும். அவர்கள் தமது உண்மையான இருப்பை, தான் பரவுணர்வு என்பதை மறந்தால்தான் அவர்களால் இவ்வுலகில் பல உருவங்களில் செயல்படமுடியும். அந்த செயல்பாடுகளுக்கும் அவனது அருள் தேவை, அவனது ஸ்திதி தேவை. முடிவில் அந்த உயிர்கள் தமது அடுத்த பிறவிக்கு முன் சிறிது ஓய்வைப் பெற அவர்களை எம்பெருமான் தன்னில் லயமாக வைக்கிறான். இவ்வாறு நடைபெறும் அனைத்துச் செயல்களும் அவனாலேயே நடைபெறுகின்றன, அவற்றிற்கு அடிப்படையாக இருப்பது அவனது அன்பே. இதைத்தான் “அன்பே சிவம்” என்கிறார் திருமூலர். இவ்வாறு அன்பின் உருவாய் இருக்கும் பெருமான், விழிப்புணர்வு, ஜீவாத்மாக்களுக்குள் சுடராக காணப்படுகிறது. உடலெடுத்த உயிர்களின் செயல்பாடுகள் அவனது நடனத்தாலேயே நடைபெறுகின்றன. இதைத்தான் அகத்தியர் தனது ஞானம் 2 என்ற தொகுப்பில் கூறுகிறார்.


இதைத் திருமூலர்
“தாண்டவமான தனி எழுத்து ஓர் எழுத்து
தாண்டவமானது அனுக்கிரகத் தொழில்
தாண்டவம் கூத்துத் தனி நின்ற தற்பரம்
தாண்டவம் கூத்துத் தமனியந்தானே”
என்கிறார்.


அகாரம் என்னும் தனி முதல் எழுத்தே அனைத்துமாகத் தாண்டவமாடுகிறது. இந்த தாண்டவமும் அதன் அனுகிரஹத்தினால் ஏற்படுகிறது. இவ்வாறு தாண்டவமாடும் தற்பரம், ஒன்றையும் சாராத பரம்பொருள், தனி அம்பலத்தில் ஆடுகிறது. இதில் தமனி என்ற சொல் அம்பலம் என்று பொதுவாகப் பொருள்படும். தமனி என்பது நாடிகளுக்கு மற்றொரு பெயர்!


சிறு குறிப்பு: 


ஆதிசங்கர பகவத் பாதாள் சௌந்தர்யா லஹரியின் பல பாடல்களில் குண்டலினி யோகத்தை விளக்குகிறார். ஒன்பதாவது ஸ்லோகமான


“மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத மாகாச முபரி
மனோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹாஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரசே


என்னும் ஸ்லோகத்தில் “மூலாதாரம், மணிபூரகம், சுவாதிஷ்டானம் ஆகியவற்றில் பூமி, நீர் மற்றும் அக்னி தத்துவங்களையும், அனாகதத்தில் காற்றுத் தத்துவத்தையும், விசுத்தியில் ஆகாய தத்துவத்தையும் ஆக்னையில் மனோதத்துவத்தையும் கடந்து தேவி சகஸ்ராரத்தை அடைந்து அங்கே தனது துணைவருடன் கூடி மகிழ்கிறாள் என்கிறார் பகவத்பாதர் .


இதனை அடுத்த ‘ஸுதா தாராஸாரை’ என்று தொடங்கும் ஸ்லோகத்தில் அவ்வாறு சஹஸ்ராரத்தை அடைந்த அம்பாள் தனது திருவடிகளிலிருந்து பெருகும் அமிர்ததாரையால் உடலில் உள்ள நாடிகள் அனைத்தையும் நனைக்கிறாள். அதன் பிறகு தான் இருக்கும் சந்திர மண்டலத்திலிருந்து தனது இருப்பிடமான மூலாதாரத்துக்குத் திரும்பி பாம்பைப் போல குண்டல உருவை எடுத்துக்கொண்டு சிறு துவாரத்தையுடைய குலகுண்டத்தில் உறங்குகிறாள் என்று கூறுகிறார். இது குண்டலினி சக்தியின் ஆரோகண ஆரோகணத்தைக் குறிக்கும். மூலாதாரத்திலிருந்து புறப்படும் சக்தி சஹஸ்ராரத்தை அடைந்து அங்கு பொழியும் அமிர்தத்தால் உடலை நனைத்து, அதற்கு அழியாத தன்மையை அருளி மீண்டும் மூலாதாரத்துக்குத் திரும்புகிறது. இவ்வாறு குண்டலினி ஆறு ஆதாரங்களையும் கடந்து சஹாஸ்ராரத்தில் சமாதி எய்துதல் “ஷட்சக்ரவேதனா” என்றும் ‘அந்தர்யாகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. நமது உடல் அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்று மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது. மூலாதாரமும் சுவாதிஷ்டானமும் அக்னி மண்டலத்தைச் சேர்ந்தவை. அவற்றின் மேல் இருப்பது பிரம்ம கிரந்தி என்ற முடிச்சு. மணிபூரகமும் அனாஹதமும் சூரியமண்டலத்தைச் சேர்ந்தவை. அவற்றிற்கு மேல் இருப்பது விஷ்ணு கிரந்தி. விசுத்தியும் ஆக்ஞாவும் சந்திர மண்டலத்தைச் சேர்ந்தவை ஆக்ஞாவில் இருப்பது ருத்ர கிரந்தி.

இவ்வாறு பல சக்கரங்களைக் கடந்த விழிப்புணர்வு அடையும் சுழுமுனையின் உச்சியில் கவிழ்ந்த வாழைத்தாரைப் போல இருக்கும் சஹாஸ்ராத்தின் மீது சக்தி சிவனைச் சேரும் இடம் சிவாக்னி அல்லது சக்தி முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. சௌந்தர்ய லகரி ஸ்லோகம் 33 ல் இதற்கான விளக்கம் உள்ளது. இந்த முக்கோணத்தை அகத்தியர் இத்தொகுதியில் உள்ள இரண்டாம் பாடலில் குறிப்பிடுகிறார். இந்த முக்கோணத்தின் மீது சம்பு, ஹரன் தனது பாதத்தைத் தூக்கி நிற்கிறார். அது பரவெளி என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

Comments

Popular posts from this blog

தச வாயுக்களும் அதன் பணிகளும்

சுவாசம்

கற்பம் (அகம்)