அகத்தியர் ஞானம் 3

அகத்தியர் ஞானம் 3
  
அண்ணாக்கு உண்ணாக்குள் பத்தவேதான்
அகாரமுடன் பதினாறு மிதற்குள் ளாகும்
விண்ணாடிப் பாயுமங்கேகால் மேலோ
விழிரெண்டு நடுநெத்தி மேனிப் பாரு
கண்ணாடி நீங்குமப்போ தமர்வாசல் மேல்
கால் மாறி யாடுமங்கே கும்பி ரேசி
பண்ணாடும் ஆறுவரைக் கேறும் வாசி
பளிச் சென்று கோடி ரவி காந்தியாமே (1)

அகத்தியர் தனது ஞானம் 1, 2 ல் எவ்வாறு பஞ்ச பூதங்களும் தன்மாத்திரங்களும் கர்ம ஞானேந்திரியங்களும் உயிரெழுத்துக்களும் மனித உடலில் சக்கரங்களாக இருக்கின்றன என்றும், குண்டலினி யோகத்தைப் பற்றியும் கூறினார். இந்த ஞானம் 3 ல் அவர் ஆக்ஞா சக்கரத்தைப் பற்றியும் கேசரி முத்திரையைப் பற்றியும், சாம்பவி முத்திரையைப் பற்றியும் அதனால் ஏற்படும் விசேஷ உணர்வுகள் காட்சிகள் ஆகியவற்றைப் பற்றியும் கூறுகிறார். கேசரி முத்திரை, வாசி யோகம் எனப்படும் மூச்சுப் பயிற்சியில் ஒரு முக்கியமான முத்திரையாகும். இதனைப் பற்றிய விவரங்களைக் கீழே பார்ப்போம்.


செயல்முறைத் தளத்தில் கேசரி முத்திரை என்பது நாக்கை உள்நாக்கு எனப்படும் அண்ணாக்கினுள் செலுத்துவது. இதற்கு நாக்கின் அடியில் உள்ள தசையை மென்மையாக, கொஞ்சம் கொஞ்சமாக பல மாதங்களில் அறுத்து நாக்கின் நீளம் அதிகரிக்கப்படுகிறது. நாளடைவில் நாக்கு, மூக்கும் வாயும் சேரும் இடத்தைத் தொடுமளவு நீளுகிறது. அதன் நுனி இரு புருவங்களுக்கும் மத்திவரை சென்று அங்குள்ள சுழுமுனை, இடை, பிங்கலை ஆகியவை சேரும் புள்ளியைத் தொடுகிறது. அப்பொழுது மூச்சின் அசைவு நிறுத்தப்படுகிறது. யோகத்தின் உச்ச நிலையை அடைந்த யோகிகள் இந்த முத்திரையில் மூச்சின் ஓட்டம் இல்லாமல் நாற்பது நாட்கள் வரை அமர்ந்துள்ளனர். இதன் பலனாக pineal gland என்னும் நாளமில்லா சுரப்பியிருந்து அம்ருதம் ஊறுகிறது. இந்த அமிர்தத்தைப் பருகியவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுகின்றனர் என்று சித்தர்கள் கூறுகின்றனர். விண்ணாடி என்ற சொல் விண்ணை நாடி என்றும் விண்ணை நோக்கிச் செல்லும் நாடி என்றும் பொருள்படுகிறது. போதமர் வாசல் என்பது- தாமரைப் பூவாகக் காட்டப்படும் சக்கரத்தைக் குறிக்கிறது.


பட்டாசார்யர் என்பவர் “க என்பது பிரம்மாவைக் குறிக்கிறது. சரி என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் போய் அவ்வாறு அசைவைத் தொடர்ந்து பெற்றிருப்பது என்று பொருள்படும். இவ்வாறு கேசரி என்பது பிரம்மாவின் செயல்பாட்டு சக்தியுடன் நகர்ந்துகொண்டே இருப்பது” என்கிறார். “க என்பது ஆகாயத்தைக் குறிக்கும். அதனால் கேசரி என்பது ஆகாயத்தில், வெளியில் சஞ்சரிப்பது என்று பொருள்படும்” என்றும் ஆன்றோர் கூறுகின்றனர். குண்டலினி யோகத்தைப் பற்றிப் பேசும்போது சுவாமி சிவானந்தா, முத்திரைகளில் தலையாய முத்திரை கேசரி முத்திரை என்கிறார். அபிநவ குப்தர் தனது தந்திராலோகா என்னும் நூலில் கேசரி முத்திரை என்பது பரவுணர்வு வெளியில் பறப்பது என்று விளக்குகிறார்.


சாம்பவி முத்திரை என்பது கண்களை மேலே நோக்கி புருவ மத்தியைப் பார்ப்பது. அது இருநிலைப் பட்ட பார்வையை விலக்கி ஒருமைப் பார்வையை தரும் என்று கருதப்படுகிறது. அப்போது கீழ்நோக்கி ஓடும் மூச்சு மேல் நோக்கி ஓடுகிறது. இதையே அகத்தியர் “கால் மாறி ஆடும்” என்கிறார். பொதுவாக நமது மூக்கினுள் நுழையும் சுவாசத்தை மணிபூரக சக்கரம் கீழ் நோக்கி இழுக்கிறது. அது சுவாதிஷ்டானம் வரை வந்து அங்கு மாறி மேல் நோக்கி ரேசகமாக வெளிப்படுகிறது. இவ்வாறில்லாமல் மூச்சு சகஸ்ராரத்தை நோக்கி ஓடினால் அது உடலில் ஒரு வெப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனால் குண்டலினி சக்தி விழித்தெழுந்து மேல்நோக்கி ஓடி ஆறு சக்கரங்களையும் கடந்து ஆக்ஞையை அடைகிறது. அப்போது அந்த யோகி சாம்பவி முத்திரையைக் கொண்டிருந்தால் அவர் கோடி சூர்யப் பிரகாசம் எனப்படும் ஒளியைத் தரிசிக்கிறார்.

கண்ணாடி மேல் புருவ மையம் பாரு
காலடங்கி மேல் துண்ட முனையைப் பாரு
உண்ணாக்கு மேலேத்தி உன்னிப் பாரு
ஓடாதே உறங்காதே பிதற்றிடாதே
பெண்ணாசையால் கொண்டழுத்திடாதே
பேரின்ப வர்மத்தை மறந்திடாதே
பண்ணாரக் குலை களவு கழற் காமத்தை
பரிகரித்தா லஷ்ட கர்மம் பலிக்கும் தானே


இப்பாடலிலும் அகத்தியர் சாம்பவி முத்திரையைப் பற்றிப் பேசுகிறார். கண்களை புருவ மத்தியில் குவிப்பது சாம்பவி முத்திரை. அப்போது கும்பக சித்தி எனப்படும் மூச்சு நிற்பது ஏற்படுகிறது. மேல் துண்ட முனையைப் பார்க்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். துண்டம் என்பது துண்டுபட்ட மூச்சைக் குறிக்கும். உள்மூச்சு வெளிமூச்சு என்று சுவாசம் தனது கதியை மாற்றிக்கொள்ளும்போது அது துண்டுபடுகிறது. இது சுவாதிஷ்டான சக்கரத்தில் நிகழ்கிறது. மேலே இது நடைபெறும் இடம் ஆக்ஞை. இவ்வாறு நோக்கும்போது ஏற்படும் அனுபவம் ஒருவரை மனப்பிறழ்வு அடையச் செய்யக்கூடியது. தகுந்த பயிற்சியில்லாவிட்டால் அவர் ஓடுவர், பிதற்றுவார், தூக்கமிழந்து தவிப்பார் அல்லது தூக்கத்திலிருந்து மீள மாட்டார். இந்த புள்ளி வர்மப்புள்ளி என்பதால் குண்டலினிப் பெண்ணைக் காணவேண்டும் என்ற அவாவினால் அழுத்த வேண்டாம், அப்போதுதான் உச்ச் இன்பம் ஏற்படும் என்கிறார் அகத்தியர். இந்த முத்திரையை ஒருவர் வெளியொழுக்கங்களுடன் செய்தால் அவருக்கு அஷ்ட கர்மங்கள் வசப்படும் என்கிறார் அகத்தியர்.


கேரண்ட சம்ஹிதை என்ற யோக நூல், “ சாம்பவி முத்திரையை கைக்கொண்டு ஒரு யோகி ஆத்மனைத் தரிசிக்கிறார். அப்போது பிரம்மம் ஒரு புள்ளியாகத் தோன்றுகிறது. அந்த யோகி தனது கவனத்தை அதில் குவித்தால் தானே பிரம்மம் என்பதை உணருகிறார். மகேச்வரனான நான் இந்த முறையைத் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்” என்று காணப்படுகிறது. இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் யோகி ஆக்னையில் பல அதிசயக் காட்சிகளைக் காண்கிறார். அங்கு ஐம்பூதங்களும் ஒன்றாகி வானவில்லின் நிறத்தில் காணப்படும். பரம்பொருள் ஒரு மணியுருவில் தோன்றி ஆடும். அதில் மனத்தைக் குவிக்கும்போது அந்த மணி மெதுவே மறைந்து பரவுணர்வு ஏற்படுகிறது.


இந்த பயிற்சிகளுடன் ஒருவர் யம நியமங்கள் எனப்படும் வெளி ஒழுக்கங்களையும் உள்ளொழுக்கங்களையும் பயிற்சி செய்யும்போது அஷ்ட கர்மங்கள் எனப்படும் வசியம், மோகனம், ஸ்தம்பனம், ஆகர்ஷணம், உச்சாடனம், வித்வேஷணம், பேதனம், மாரணம் என்பவை வசப்படும். வசியம் என்பது ஒருவரைத் தன்னை நோக்கிக் கவருவது, மோகனம் என்பது பிறருக்கு மதிமயக்கம் ஏற்படுத்துவது, ஸ்தம்பனம் என்பது பிறரை அசையவிடாமல் கட்டுவது, ஆகர்ஷணம் என்பது பிறரைத் தன்னை நோக்கி இழுப்பது, உச்சாடனம் என்பது பிறரை நிலைகுலையச் செய்து அவ்விடத்தைவிட்டு ஓடச் செய்வது, வித்வேஷணம் என்பது நண்பர்களுக்குள் பகைமையை ஏற்படுத்துவது, பேதனம் என்பது வேறுபாட்டை ஏற்படுத்துவது, மாரணம் என்பது மரணத்தை ஏற்படுத்துவது. இந்த சித்தியைப் பெறுவதற்கு ஒருவர் கொலை, களவு, காமம் ஆகியவற்றை விட்டுவிட வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்


நாசியிடை பின்கலையாய் சுழிமுனையாகி
நடுவீதி போக்குவரத் தாகி நிற்கும்
வாசிதனை மேலெழுப்பி சுழினை மீதில்
மனங்குளிர நிறுத்தி மகிழ் வாசி யூத
பாசிமல திரோதாயி மயக்கம் நீங்கி
பரிசுத்த மெய்ஞ்ஞானப் பரமனாகி
காசிவெளி தனிலண்டங் கண்ணில் கண்டு
களித்திகெய நன்மனமே கருதிப் பாரே


வாசி என்னும் மூச்சுப் பயிற்சியைப் பற்றி சித்தர்கள் விரிவாகப் பேசியுள்ளனர். ஆன்மீகத்தில் மிக முக்கியமான மூன்று நாடிகள் இடை, பிங்கலை சுழுமுனை என்று முன்னமே பார்த்தோம் (அகத்தியர் ஞானம் 2). இதில் இடை என்பது சந்திரகலை என்றும் பிங்கலை என்பது சூரிய கலை என்றும் அழைக்கப்படுகின்றன. இடை இடது நாசியில் ஓடுகிறது, பிங்கலை வலது நாசியில் ஓடுகிறது. மூச்சை இடது நாசியில் மட்டும் போக வைத்தால் உடல் குளிரும் (சந்திரனின் குளிர்ச்சி), வலது நாசியில் பயணிக்க வைத்தால் உடல் சூடாகும் (சூரியனின் வெப்பம்). பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி இந்த இரு கலைகளையும் ஒரு சமநிலைக்கு வைக்க முயலுவதே.


வாசி யோகப் பயிற்சியின்போது பிங்கலையிலும் சுழுமுனையிலும் மூச்சைச் செலுத்த வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். பிங்கலையில் மூச்சு பயணிக்கும்போது உடல் வெப்பமடைந்து குண்டலினி அக்னியை விழித்தெழச் செய்கிறது. அப்போது குண்டலினி அக்னியின் உதவியுடன் மூச்சு, பிராணன், மனம், உணர்வு ஆகியவற்றை ஒன்றாகக் கூட்டி சுழுமுனையில் செலுத்த வேண்டும். இது பிங்கலை சுழுமுனை நாடிகளின் மூலம் நடைபெறுகிறது. இவ்வாறு ஏற்றப்படும் வாசி நடுவீதி எனப்படும் சுழுமுனை நாடியில் அங்குள்ள சக்தி மையங்களான சக்கரங்களின் ஊடே பயணிக்கிறது. இதற்கு மூச்சை துருத்தியை ஊதுவதைப் போல விசையுடன் செலுத்தவேண்டும் என்று சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூச்சுப் பயிற்சியுடன் உடலிலும் மனத்திலும் மாயையினால் ஏற்படும் கசடுகளையும் மயக்கங்களையும் விலக்கினால் உண்மையான ஞானம் தனது நிலை என்பது புலப்படும். இது காசி எனப்படும் ஆக்ஞா சக்கரத்தில் ஏற்படுகிறது. இதைத் தான் சிவவாக்கியர்


சங்கிரண்டு தாரையொன்று சன்ன பின்னல் ஆகையால்
மங்கிமாளு தேயுலகம் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டையும் தவிர்த்து தாரைஊத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே!
என்றும் 


ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே
என்றும் கூறுகிறார்.


முன் பாடலில் உள்ள இரண்டு சங்கு என்பது இடை பிங்கலை நாடிகளாகும், தாரை என்பது சுழுமுனை நாடி. இந்த இரண்டு சங்குகளிலும் மூச்சைச் செலுத்துவதால் உலக மக்கள் அனைவரும் காலத்தின் கணக்குக்கு உட்பட்டு உடல் நலிந்து சக்தியிழந்து ஒளியழிந்து நாளடைவில் மரணத்தைத் தழுகின்றனர். இவ்வாறில்லாமல் சுழுமுனை நாடியில் பிராணனைச் செலுத்தினால் சஹாஸ்ராரத்திலிருந்து ஊரும் அமுதத்தைப் பருகி மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்று சிவவாக்கியர் கூறுகிறார். இவ்வாறு மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் குண்டலினி அக்னியுடன் பிராணன் ஆக்ஞா சக்கரத்தை அடைகிறது. ஒளி பொருந்திய இந்த இடத்தை காசி என்று சிவவாக்கியரும் அழைக்கிறார். இந்துக்களுக்கு காசி மிக முக்கியமான ஆன்மீகத் தலமாகும். இந்த நகரமே ஒரு யந்திரவடிவில் பல்வேறு முக்கிய புள்ளிகளில் அவற்றிற்கான கோவில்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மத்திய புள்ளியாக இருப்பது காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மையின் கோயிலாகும். இந்த காசி நகரை, ஆக்னையை அடையும் உயிர்களுக்கு விச்வனாதனான, எல்லா அண்டங்களுக்கும் அதிபதியான விசுவநாதன் விசாலாட்சி மங்கையுடன் கூடியிருந்து ராம என்னும் தாரக மந்திரத்தை உபதேசிக்கிறார் என்கிறார் சிவவாக்கியர்.

தாரகம் என்னும் சொல் உயிர் வாழ மிக அத்தியாவசியமானது என்றும் ஒரு படகு என்றும் பொருள்படும். ரா என்ற அக்னி பீஜத்தையும் ம என்ற அமிர்தபீஜத்தையும் கொண்ட ராம நாம ஒருவரது பாவங்களை சுட்டெரித்து அமிர்த நிலையை, இறவா பெருநிலையை அருளுகிறது என்று இப்பாடலுக்குப் பொருள். இந்த நிலையில் ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டுபட்ட நிலை இருப்பதில்லை, பரம்பொருள் என்ற ஒரே நிலைதான் இருக்கிறது. இது ஜீவன் அழிந்து பரம்போருளுடனோ சேர்ந்து ஏற்படும் நிலையல்ல, தானே பரம்பொருள் என்று உணரும் அத்வைத நிலை. இவ்வாறு ஆக்னையை அடையும் ஜீவன் தானே அனைத்துமாக, எல்லா திக்குகளும் அண்டங்களுமாக இருப்பதை உணருகிறது. இந்த இன்ப நிலையை கருத்தில் கொண்டு இதை அடைந்து களித்திருக்குமாறு,சத் சித் ஆனந்த நிலையில் இருக்குமாறு, அகத்தியர் கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

தச வாயுக்களும் அதன் பணிகளும்

சுவாசம்

கற்பம் (அகம்)