அகத்தியர் ஞானம் 4
அகத்தியர் ஞானம் 4
தேவிஎனும் பூரணியே மனத்தில் தோன்றி
சென்மித்தார் மனுஷரெல்லாம் சீவாத்மாவாய்
காவியமா யஞ்சுபஞ்ச கர்த்தா நாமம்
கருத்தறியா மூடருக்கு அறிவிப்பேனான்
தாவித்தா ரோருருவஞ் சொல்லாரப்பா
தாக்ஷியில்லை சொல்லுகுறேன் சிவத்தின் கூறு
மேவிப்பார் ஓம் நங்மங்சிங் வங்யங் என்று
மெய்யாகச் சிவயநம அங்கென்று பாரே (1)
இறைவன் எவ்வாறு இவ்வுலகமாகத் தோன்றினார் என்று இப்பாடல் தொகுப்பில் விளக்குகிறார் அகத்தியர். இதன் முதல் படியாக தேவி மனதில் தோன்றினாள். இங்கு மனம் என்பது பிரபஞ்ச மனத்தைக் குறிக்கும். அதன் பின் உயிர்கள் ஜீவாத்மாக்களாகத் தோன்றின. அவர்களது உடலில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற பஞ்ச கர்த்தாக்கள் அல்லது ஐந்து செயல்புரிபவர்கள் தோன்றினர் என்கிறார் அகத்தியர். இங்கு இவ்வாறு குறிப்பிடப்படும் தெய்வங்கள் ஒரு உருவைக் கொண்டவையல்ல என்றும் அவர் கூறுகிறார். அதாவது இவர்கள் ஐவரும் நமது உடலில் உள்ள மூலாதாரம்/சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி மற்றும் ஆக்ஞை சக்கரங்களையும் விழிப்பு, கனவு, ஆழுறக்கம், துரியம், துரியாதீதம் என்ற உணர்வு நிலைகளையும் குறிக்கின்றனர். இந்த பஞ்சகர்த்தாக்கள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம் மற்றும் திரோதாயி என்ற ஐந்து மலங்கள் உள்ள நிலைகளையும் குறிக்கின்றனர். உதாரணமாக பிரம்மா ஐந்து மலங்களையும், விஷ்ணு நான்கு மலங்களையும், ருத்திரன் மூன்று மலங்களையும், மகேஸ்வரன் ஆணவம் கர்மம் என்ற இரண்டு மலங்களையும் சதாசிவன் ஆணவம் என்ற மலத்தையும் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு குறிப்பிடப்படும் பஞ்ச கர்த்தாக்கள், மனிதனின் சூட்சும சரீரத்தைக் குறிக்கின்றனர். இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கிய யோக வழிமுறையைக் குறிப்பிடுகிறார். தமிழ் சித்தர்களின் யோகம் வாசி யோகம் எனப்படுகிறது. வாசி என்ற சொல் வா+சி என்று பிரிந்து வா எனப்படும் பிரபஞ்ச பிராணன் உடலினுள் உள்ள குண்டலினி அக்னியுடன் கலப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு உடலுள் வரும் பிராணன் ஒவ்வொரு சக்கரத்தின் ஊடும் பயணித்து மூலாதாரத்தை அடைந்து அங்குள்ள குண்டலினி அக்னியை எழுப்புகிறது. இந்த சக்கரங்களை அகத்தியர் நங், மங், சிங், வங், மங் என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு உடலினுள் வரும் பிராணன் குண்டலினியை எழுப்பி உடலில் உள்ள பிராணனை பிரபஞ்ச பிராணனுடன் சேர்க்கின்றது. இதுவே சிவ யோகம் எனப்படுகிறது. இவ்வாறு உடலினுள் இடா நாடியின் மூலம் வரும் பிராணன் பிங்கலை நாடியின் மூலம் உடலில் சேமிக்கப்படுகிறது. இதுவே தமிழ் சித்தர்களின் வாசி-சிவ யோகம். சிவ யோகத்தை அகத்தியர் நமசிவய என்று குறிப்பிடுகிறார்.
இவ்வாறு உலகமாக இருக்கும் சிவத்தின் கூறை ஓம்நமசிவய என்ற மந்திரமாகக் காணுமாறு அகத்தியர் கூறுகிறார். அவர் இந்த மந்திரத்தை ஓங் நங்மங்சிங்வங்யங் என்று கூறுகிறார்.
ஓம் என்னும் எழுத்தின் விரிவே நமசிவய என்னும் ஐந்தெழுத்தாகும். ஓம் என்பது அ, உ, ம, பிந்து, நாதம் என்று ஐந்து பகுதிகளைக் கொண்டது. சிவனின் வாமதேவ (வடக்கு) முகத்திலிருந்து ‘அ’காரமும், சத்யோஜாத (மேற்கு) முகத்திலிருந்து ‘உ’காரமும், அகோர (தெற்கு) முகத்திலிருந்து ‘ம’காரமும், தத்புருஷ (கிழக்கு) முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கப்புள்ளியும், ஈசான (மேல் நோக்கியது) முகத்திலிருந்து நாதமாகிய முழுமையான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ‘ஓம்’ என்ற பிரணவத்தோடு சிவனை நமஸ்கரிக்கிறேன் என்று பொருள்படும் நமசிவய என்ற தொடர் சேர்த்து ஆறெழுத்து மந்திரம் உருவானது. ஓம்நமசிவய என்ற இந்த ஆறெழுத்து மந்திரமே செயல்பாடுடைய உலகமாகக் காட்சியளிக்கிறது. உதாரணமாக, நங் என்பது பூமியையும், மங் என்பது நீரையும், சிங் என்பது தீயையும், வங் என்பது காற்றையும் யங் என்பது ஆகாயத்தையும் குறிக்கின்றன. இந்த எழுத்துக்கள் ஒம்காரத்துடன் சேர்ந்து செயல்பாடுடைய பஞ்சபூதங்களாயின.
ஐம்பூதங்களின் தன்மைகளான ஐந்து தன்மாத்திரைகளும் நமசிவய என்ற ஐந்தெழுத்திலிருந்து தோன்றின. ந என்பது தொடுவுணர்ச்சியையும் ம என்பது சுவையையும் சி என்பது உருவத்தையும் வ என்பது நாற்றத்தையும் ய என்பது சப்தத்தையும் குறிக்கும். ஜீவாத்மா இருக்கும் உடலும் நமசிவய என்ற ஐந்தெழுத்திலிருந்து பிறந்ததுதான்.
சிவவாக்கியர் தனது சிவவாக்கியம் பாடல் 96ல்
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துளே
என்று பாடுகிறார்.
குண்டலினி சக்தியின் மையங்களான சக்கரங்களும் நமசிவய மந்திரத்தின் தலங்களாகும். ந என்பது மூலாதாரத்தையும், ம என்பது சுவாதிஷ்டானத்தையும், ம என்பது மணிபூரத்தையும், சி என்பது அனாஹதத்தையும் ய என்பது விசுத்தியையும் குறிக்கும்.
இந்த ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் ஐந்து முகங்களான தத்புருஷம், வாமதேவம், ஈசானம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துமுகங்களுக்கும் 5 X5= 25 வகை மந்திரங்களாக இருக்கின்றன என்று அகத்தியர் தனது திருமந்திர விளக்கம் என்னும் நூலில் கூறுகிறார்.
சிவமகா புராணத்தின் வாயு ஸம்ஹிதையில் உள்ள உத்தர பாகத்தின் ஆரம்பத்தில், ஐந்து அட்சரங்களுக்கும் உரிய நிறங்களும், அவற்றிற்குரிய ரிஷிகளும், சிவ பரம்பொருளின் எந்தெந்த முகத்திற்கு எந்தெந்த அட்சரங்கள் என்றும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. ‘ந’ என்ற எழுத்து, கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது. இதன் நிறம் மஞ்சள். ரிஷி, கவுதம மகரிஷி. ‘ம’ என்ற எழுத்து தெற்கு நோக்கிய முகத்திற்குரியது. இதன் நிறம் கருப்பு. ரிஷி, அத்திரி மகரிஷி ஆவார். ‘சி’ என்ற எழுத்து மேற்கு நோக்கிய முகத்திற்கு உரியதாகும். இது புகையின் நிறம் உடையது. ரிஷி, விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். ‘வ’ என்ற எழுத்து வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியதாகும். இது பொன்னிறமான நிறத்தையுடையது. இதன் ரிஷி, ஆங்கீரஸ மகரிஷியாவார். ‘ய’ என்ற ஐந்தாவது எழுத்து மேல் நோக்கிய திருமுகத்திற்கு உடையதாகும். இது சிவந்த நிறம் கொண்டது. இதனுடைய ரிஷி, பரத்வாஜ மகரிஷியாவார்.
ந-ம-சி-வ-ய என்கிற மந்திரம் ஸ்தூல பஞ்சாக்ஷரம் எனப்படும்.
சி-வ-ய-ந-ம என்கிற மந்திரம் சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம் எனப்படும்.
சி-வ-ய-வ-சி என்கிற மந்திரம் அதிசூக்ஷ்ம பஞ்சாக்ஷரம் எனப்படும்.
சி-வ என்கிற மந்திரம் காரண பஞ்சாக்ஷரம் எனப்படும்.
சி என்கிற மந்திரம் மகா காரண பஞ்சாக்ஷரம் எனப்படும்.
முதல் மூன்றையும் பற்றித் திருமூலர் ஒன்பதாம் தந்திரத்தில் மந்திரம் 2698 லிருந்து 2721 வரை விளக்கமாகக் கூறியுள்ளார் (முனைவர் டி.என்.கணபதி அம்மன் தரிசனம் அக்டோபர், நவம்பர்,2012). இவ்வாறு ஸ்தூல பஞ்சாட்சரம் என்னும் ஓம்நமசிவய என்பது சிங்வங்யங்நங்மங்அங் என்று உள்ளது என்கிறார் அகத்தியர். உலகம் படைக்கப்படும்போது உள்ள ஓம் நமசிவய என்ற ரூபம் லயத்தின்போது சிவயநம அங் என்று உள்ளது.
Comments
Post a Comment