தசதீட்சை


தசதீட்சை

அம் - முதல் தீட்சை
கேளு அம்மென்று கெடியாக மண்டலம்

நாளுடன் செபிக்கில் நமனது விலகுஞ்

சேலுடன் தேகந் திரமது வாகும்

மாலுடன் சித்தும் வந்திடுந் தானே.

முதல் தீட்சையாக "அம்" என்ற மந்திர உச்சரிப்பை ஒரு மண்டலம் தொடர்ந்து செபித்தால் எமன் அண்ட மாட்டானாம்.மேலும் இந்த மந்திரத்தை செபிப்பவர் உடலானது அழியாத நிலையை அடையும் என்கிறார்.மேலும் சில சித்துக்களும் கைவரப் பெறுமாம்.

முதல் தீட்சையை முடித்த பின்னர் குருவருளை வேண்டி வணங்கி இரண்டாம் தீட்சையை செய்திடல் வேண்டும்.இதே வகையில் ஒவ்வொரு தீட்சையாக செய்துமுடிக்க வேண்டுமென்கிறார் மச்சமுணிவர்.

உம் - இரண்டாம் தீட்சை

தானது ரெண்டாந் தீட்சையைக் கேளு

ஆனது உம்மென் றள்புட னீயும்

வானது நோக்கி மண்டலஞ் செபித்தால்

கோனவ னருள்தான் குடியிருப்பாமே.

இந்த தீட்சையில் "உம்" என்ற மந்திரத்தை வானத்தை நோக்கியவாறு ஒரு மண்டலம் செபித்து வந்தால் இறையருள் சித்தியாகுமாம்.நேற்றைய பதிவில் கூறியுள்ள முறைப்படி இந்த மந்திரத்தை செபித்து வர வேண்டும்.

சிம் - மூன்றாம் தீட்சை

குடியினில் மூன்றாந் தீட்சையைக் கேளு

முடியினில் சென்று முழுமனதாக

அடியினில் சிம்மென் றன்புட னீயும்

வடிவுடன் நன்றாய் வணங்கிடு முத்தியே.

இரண்டாவது தீட்சையை நிறைவேற்றிய பின்னர் இந்த மூன்றாவது தீட்சையை துவங்க வேண்டும். இந்த தீட்சையில் "சிம்" என்ற மந்திரத்தை, மனதை ஒரு முகப் படுத்தி அர்ப்பணிப்புடன் ஒரு மண்டலம் செபித்து வர சித்தியாகும் என்கிறார்.

நம்- நான்காம் தீட்சை

முத்தியில் நாலாந் தீட்சையைக்கேளு

அத்த னருளை யன்புட நோக்கி

உத்தம நம்மென் றுரிமையாய்ச் செபிக்கில்

சித்தஞ் சிவமாய்த் தானவ னாமே.

மூன்றாவது தீட்சையை செபித்து அது சித்தியான பின்னர் இந்த நான்காம் தீட்சையை துவங்கிட வேண்டுமென்கிறார்.இந்த முறையில் "நம்" என்ற மந்திரத்தை ஒரு மண்டலம் தடையின்றி செபித்து வர செபிப்பவரின் சித்தம் சிவமயமாகுமாம்.

தம்- ஐந்தாம் தீட்சை
தானது அஞ்சாந் தீட்சையைக் கேளு

ஆனது தம்மென் நன்புட னீயும்

வானுட நோக்கி மகிழ்ந்துருக் கொண்டால்

ஊனுடன் தேகம் உறுதியு மாமே.

நான்காவது தீட்சையை செபித்து சித்தியடைந்த பின்னர்,ஐந்தாவது தீட்சையாக "தம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தேகம் உறுதி மிக்கதாகுமாம்.

லங்- ஆறாம் தீட்சை

உறுதியா மாறாந் தீட்சையைக் கேளு

நெறி தவறாமல் நேர்மையில் நின்று

சுருதியி லங்கென் றுடர்ந்துருக் கொண்டால்

பருதி போல் தேகம் பக்குவமாமே.

ஐந்தாவது தீட்சை செபித்து அந்த மந்திரம் சித்தியான பின்னர்,ஆறாவது தீட்சையாக "லங்" என்ற மந்திரத்தினை முழு மனதுடன் ஒருமண்டலம் செபித்து வர தேகமானது பருத்தியைப் போல பக்குவமாகுமாம்.

ரம் - ஏழாம் தீட்சை

பக்குவ மேழாந் தீட்சையைக் கேளு

திக்கும் பொருளாய்த் தானேரம் மென்று

சிக்குமிடந் தன்னில் சென்றுரு செபித்தால்

திக்கு விசையஞ் செய்யலு மாமே.

ஆறாவது தீட்சை முறையாக செபித்து முடிந்ததும், ஏழாவது தீட்சையாக "ரம்" என்ற மந்திரத்தை முழு மனதுடன் ஒருமண்டலம் செபிக்க அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் வல்லமை சித்திக்குமாம்.



கம்- எட்டாம் தீட்சை

செய்யவே எட்டாந் தீட்சையைக் கேளு

பையவே பிரம பதியிட மாகிக்

கையது நெல்லிக்கனி யதுபோல

வையகந் தன்னிற் கம்மென நில்லே.

நில்லே நிலையில் நினைவுடன் நின்றால்

தொல்லைகள் அகலுஞ் சோதிகள் காணுந்

தில்லையில் வாழுந்த தெரிசனங் காணும்

நல்லது எட்டுச் சித்துகள் நன்மையே.

ஏழாவது தீட்சை செபித்து முடிந்ததும், எட்டாவது தீட்சையாக "கம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தொல்லைகள் எல்லாம் நீங்குமாம். மேலும் சோதி தரிசனமும், தில்லையில் வாழும் ஈசன் தரிசனமும் கிட்டுமாம். இந்த எட்டு சித்துக்களும் கைவரப் பெறுவது மிக்க நன்மையாகும் என்கிறார் மச்ச முனிவர்.

ரூம் - ஒன்பதாம் தீட்சை

நன்மையா மென்பதாந் தீட்சையைக்கேளு

உன்னமரும் மெனவே யுகந்துருக் கொண்டால்

சின்மயமான தெரிசனங் காணும்

தன்மை யீதெனவே சாந்திட முத்தியே.

எட்டாவது தீட்சை செபித்து முடிந்ததும் ஒன்பதாவது தீட்சையாக "ரூம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க சின்மயமான சிவனின் தரிசனம் கிட்டுமாம் அவ்வாறு கிட்டினால், முக்தியும் கைகூடும் என்கிறார்.

மம்- பத்தாம் தீட்சை

சாந்திடப் பத்தாந் தீட்சையைக்கேளு

கூர்ந்திடு மந்தக் குறியை நீபார்த்து

ஆர்ந்திடு மம்மென றனுதினம் நோக்கில்

தீர்ந்திடும் பிறவித் திருவு மாமே.

ஒன்பதாவது தீட்சை சிறப்பாக செபித்து முடிந்ததும் பத்தாவது தீட்சையாக "மம்" என்ற மந்திரத்தினை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க மறுபிறவி நீங்கும் என்கிறார்.இதன் மூல பிறவா பேரின்பநிலை சித்திப்பதுடன், சொரூப சித்தியும் கைகூடுமாம்.

Comments

Popular posts from this blog

தச வாயுக்களும் அதன் பணிகளும்

சுவாசம்

கற்பம் (அகம்)