அகத்தியர் ஞானம் - 4-2
அகத்தியர் ஞானம் - 4-2
பாருமே ஓரெழுத்துச் சொல்லக் கேளு
பண்பாக ஓங்கென்று ஒட்டிப் பாரு
சீருடனே தாயங்கே காணலாகும்
சொல் பிரிய சீஷர்களே சொல்லக் கேளு
தேருமே மனத்தாலே எட்டெழுத்தைக் கேளு
தேறினால் ஞானியவன் கருத்தினாலே
மாறுகின்ற சோதியை நீ கண்டுகொண்டு
மனமான சஞ்சலத்தைக் கடந்திடாயே (2)
இப்பாடலில் அகத்தியர் ஓம் என்னும் பிரணவத்தையும் அது எட்டெழுத்து மந்திரமாக விரிவதையும் அதன் தன்மையையும் விளக்குகிறார். ஓம் என்ற ஓரெழுத்து ஒருமை நிலையைக் குறிக்கிறது. வெளிப்பாட்டின் முதல் படி இது. இதனை அடுத்த படி சிவ சக்திகளாக மாறும் நிலை. அதைக் குறிப்பது எட்டெழுத்து மந்திரம். அதை அ உ ம நமசிவய என்றோ ஐம், க்லீம், சௌ நமசிவய என்றோ கருதலாம். இங்கு ஒருவர் தாயைக் காணலாம் அதாவது சக்தி வெளிப்படுவதைக் காணலாம் என்கிறார் அகத்தியர். இந்த வெளிப்பாட்டுக் கிரமத்தை, எட்டெழுத்தை ஒரு ஞானி தனது மனத்தால் நோக்கினால், எண்ணிப் பார்த்தால் அது ஜோதி நிலையில் இருக்கும் பரம்பொருளின் மாறுபாடே என்பதை அறிவார். அவ்வாறு அறிவதன் மூலம் அவர் சஞ்சலம் என்ற மனத்தைக் கடக்கிறார் என்கிறார் அகத்தியர். மனம் சஞ்சலமடையும் என்று கூறுவது வழக்கம். சஞ்சலமே மனம் என்று அகத்தியர் இங்கு கூறுகிறார். சஞ்சலம் என்பது அசைவு, அசைவு சக்தி நிலை. இவ்வாறு சஞ்சலம் என்பதன் உண்மையை அறிந்தால் ஒருவர் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கலாம் என்பது அகத்தியரின் கருத்து.
Comments
Post a Comment