அகத்தியர் ஞானம் - 4-3
அகத்தியர் ஞானம் - 4-3
கடந்திட்ட மனமே கேளு காசினி மன்னர் கோடி
இடந்திட்ட இந்திரர் கோடி எண்ணவு முடியா தப்பா
படைத்திட்ட அண்டங் கோடி பரகெதி ஞானங் கோடி
கடந்திட்ட மனத்தினாலே கண்டறி நீதானப்பா (3)
படைப்பைப் பற்றிய தனது விளக்கத்தை இப்பாடலிலும் தொடர்கிறார் அகத்தியர். மேற்கூறிய விதத்தில் எண்ணற்ற மன்னர்களும் (மானிடர்களும்), இந்திரர்களும் (தேவர்களும்), அண்டங்களும் (ஜட வஸ்துக்களும்) பரகதி, ஞானங்களும் படைக்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். முற்பாடலில் அவர் இறைவர்கள் அனைவரும் ஜீவன் தோன்றும் உடலில் படைக்கப்பட்டனர் என்று கூறினார். அதை இப்பாடலிலும் பொருத்தினோமானால் இந்த தேவர்கள், மனிதர்கள், அண்டங்கள் என்ற அனைத்தும் நமது உடலுள் இருக்கின்றன என்று அவர் கூறுவதாகத் தோன்றுகிறது. இவ்வாறு அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்ற கருத்து நிறுவப்படுகிறது. இவையனைத்தையும் தனது சீடர், பொதுவாக அகத்தியரது பாடல்கள் புலத்தியரைக் குறித்து இருப்பதால் அவர், தனது வேறுபட்ட நிலையைக் காண்பதைக் கடந்த மனத்தினால் பார்க்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். செம்மைப்படுத்தப்பட்ட மனம் உண்மை நிலையைக் காட்டும் என்பது அகத்தியரது கருத்து.
Comments
Post a Comment