அகத்தியர் ஞானம் - 4.4


அகத்தியர் ஞானம் - 4.4


கண்டறி ஞானந் தன்னைக் கருவுடன் கண்டாயானால்
அண்டத்தில் குளிகை தேறு மதில் வாதங் காணலாகும்
எண்டிசை யுலகந் தன்னை எளிதினில் காணலாகும்
சண்டருக்குரைக்க வேண்டாம் சாயுச்சிய ஞானமுற்றே (4)

அகத்தியர் தனது மனதை நோக்கி, “மனமே! இவ்வாறே பல கோடி மக்களும்
தேவர்களும் அண்டங்களும் உலகங்களும் திசைகளும் தோன்றின” என்று கூறி இந்த அறிவை ஞானத்தின் கரு என்கிறார், ரசவாதத்தைத் தோற்றுவிக்கும் குளிகை என்கிறார்.


T.V. சாம்பசிவம் பிள்ளை என்பவர் தனது அருஞ்சொல் விளக்கத்தில் குளிகை என்பதை தேன் போன்ற வஸ்துக்களைக் கொண்டு மருந்துப் பொருள்களை அருவருக்காது எளிதாக விழுங்குவதற்கு ஏற்றதாகச் செய்யும் ஒரு தயாரிப்பு என்கிறார். அதாவது உண்மையான மருந்தை பிற பொருள்களில் பொதித்துத் தருவது என்கிறார். இங்கு உண்மை என்ற ஞானம் உலகினுள் பொதித்துவைக்கப்பட்டுள்ளது. அந்த ஞானத்தைப் பெற்றால் அது அவ்வாறு பெற்றவருள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கீழ்ப்பட்ட உலோகங்களை எவ்வாறு ரசவாதம் உயர்ந்ததாக மாற்றுகிறதோ அதேபோல அவரை உயர்ந்த சாயுச்சிய பதவிக்கு உயர்த்துகிறது.


தமிழ் சித்தர்கள் பொதுவாக ரசவாத சொற்களைக் கொண்டு உள்ளே ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கின்றனர்.
உதாரணமாக:
நல்லவெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாய் குலாவு செம்பொனி ரண்டதாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லீரேல்
எல்லை ஒத்த சோதியானை எட்டுமாற்ற தாகுமே
என்று பாடுகிறார் சிவவாக்கியர்.


இப்பாடலின் மேலெழுந்த பொருள் ஆறு பங்கு வெள்ளியை நான்கு பங்கு செம்புடனும் மூன்று பங்கு துத்தநாகத்துடனும் இரண்டு பங்கு பொன்னுடனும் கலந்து வில்லின் ஓசையுடன் துருத்தியிட்டு நெருப்பில் ஊதினால் அது ஒளிபொருந்திய எட்டு மாற்றாக மாறும் என்பது. இது ஒரு உலோகங்களின் தரத்தை மாற்றும் ஒரு முறையைப் போலத் தோன்றுகிறது.


இதை மனவளவில் எடுத்துக்கொண்டால் ஆறு வெள்ளி என்பது குண்டலினி சக்தி அல்லது சுக்கிலத்தைக் குறிக்கும். பிராணன் நமது உடலில் சேமித்து வைக்கப்படும் இடம் சுக்கிலம். தமிழ் சித்தர்களின் யோக முறைகள் எவ்வாறு இந்த சக்தியை மீட்டு ஆன்மீக முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுத் தருகின்றன. இந்த ஆறான பிராண சக்தியுடன் மனதின் நான்கு பரிணாமங்களான புத்தி, சித்தம், மனம், அகங்காரம் ஆகியவற்றையும் மூன்று பகுதிகளான சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் குறிக்கும் இடை, பிங்கலை, சுழுமுனை நாடிகளை சேர்த்து, அதாவது அவற்றைப் பயன்படுத்தி, உள் மூச்சு வெளி மூச்சு என்ற இரண்டையும் அல்லது பிராணன் அபானன் என்ற இரண்டு வாயுக்களையும் கலந்து குண்டலினி அக்னியில் துருத்தி போல் வில்லிலிருந்து புறப்படும் அம்பு ஏற்படுத்தும் ஓசையைப் போல வாசி யோகத்தால் மூச்சை ஊதினால் எட்டு சாண் எனப்படும் இந்த உடம்பு சாதாரண நிலையிலிருந்து திவ்ய தேகமாகும் என்று கொள்ளலாம்.


இதை ஆன்ம நிலையில் எடுத்துக்கொண்டால் ஆறு தளங்களான சக்கரங்களில் விழிப்புணர்வின் நான்கு நிலைகளான விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்நிலைத் தூக்கம் மற்றும் துரியம் என்ற நான்கு நிலைகளை அல்லது காலை மாலை, மதியம், நடுநிசி என்று நான்கு காலம் (ஹதயோக பிரதீபிகா இதை தீவிர பிராணாயாமம் என்று அழைக்கிறது), பூரகம், ரேசகம், கும்பகம் அல்லது உள்மூச்சு வெளிமூச்சு மூச்சின் தடுப்பு என்ற மூன்று வழிகளில் பிராணன் அபானன் என்ற இரு வாயுக்களை வாசி யோகத்தின் மூலம் குண்டலினி அக்னியின் உதவியுடன் துருத்தியைப் போல ஊதி மேலே ஏற்றினால் அதன் மூலம் பரநிலையை அடையலாம், எட்டு எனப்படும் அகார நிலையை அடையலாம் (தமிழ் எழுத்து அ என்பது எண் எட்டைக் குறிக்கும்), சோதி நிலையை எட்டலாம் என்றும் பொருள்.


இந்த ஞானம் மிக முக்கியமானதால் அதை வீணருடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கூறுகிறார் அகத்தியர்.

Comments

Popular posts from this blog

தச வாயுக்களும் அதன் பணிகளும்

சுவாசம்

கற்பம் (அகம்)