அகத்தியர் ஞானம் - 5.1
அகத்தியர் ஞானம் - 5.1
ஆதியந்த மெய்நிறைந்த தீக்ஷை மார்க்கம்
அருள் பெற்ற புலத்தியனே சொல்லக் கேளு
சேதியந்தத்துள்ளிருக்குஞ் சுடரே போற்றி
சொல்லுகிறேன் அகாரமுடன் உகார (ம்) நோக்கி
வேதியந்தக் கமலத்தின் பொருளே யாகும்
வேதாந்த முடிந்ததுதான் எட்டும் இரண்டும்
சோதிஎன்ற தீக்ஷையது அறிந்து பாரு
சத்தியந்தான் உந்தனுக்குத் தவறாவாறே
அகத்தியரின் ஞான தீட்சை சுருக்கம் 5 என்னும் இந்த நூலில் அகத்தியர் தீக்ஷை பற்றி புலத்தியருக்குக் கூறுகிறார். தீட்சை என்றால் ஒரு இலக்கை நோக்கித் தொடங்கும் பாதையின் முதல் படி, ஆரம்பம் என்று பொருள். இங்கு இலக்கு பரவுணர்வு. தமிழ் சித்தர் மார்க்கத்தில் அதற்கான தீட்சை தச தீட்சை எனப்படுகிறது.
அருணாசல குரு என்பவர் தனது நிஜானந்த போதம் என்ற நூலில் தச தீட்சை என்பது பத்து நிலைகளைக் கொண்டது என்று கூறுகிறார்.
முதல் தீட்சையில் உடலில் உள்ள அழுக்கு நீர் வெளியேறுகிறது.
இரண்டாவது தீட்சையில் வாதம் பித்தம் கபம் என்ற மூன்றும் உடலைவிட்டு வெளியேறுகின்றன.
மூன்றாவதில் பழைய அழுக்கு ரத்தம் உடலைவிட்டு வெளியேறுகிறது.
நான்கில் சடலம் கழன்று தோல் பாம்பு சட்டையை உரிப்பதுபோல விலகுகிறது.
ஐந்தில் சட்டை கழண்டு உடல் சிவக்கும், ஐந்து கர்த்தாக்களும் வேண்டியதைத் தருவர். ஆறாவதில் மற்றொரு சட்டை கழலும். சுழுமுனை திறக்கும், தொலைநோக்கு கிட்டும். ஏழாவதில், சட்டை வெள்ளை நிறமாகி விலகும், உடல் ஜோதியைப் போல ஒளிரும். எட்டாவதில் உடல் உயரே தூக்கும், ஆனந்த ஆஸ்பதம் ஏற்படும். கூடு விட்டு கூடு பாயும் தன்மை ஏற்படும்.
ஒன்பதாவதில் உடல் சூரிய பிரகாசம் போல மின்னும். அஷ்டமாசித்திகள் ஏற்படும், தேவர்கள் அவருக்கு சேவை புரிவர்.
பத்தாவதில் ஸ்வரூப சித்தி ஏற்படும். அவரது உடலை கத்தியால் வெட்ட முடியாது. அது விளக்கைப் போல ஒளிபெற்றதாக இருக்கும். மூப்பு சாக்காடு, வியாதி ஆகியவை விலகிவிடும். இவ்வாறு தச தீட்சை என்பது பத்து நிலைகளைக் குறிக்கும் என்று அருணை குரு கூறுகிறார். இதைத் தவிர சிவநிலை சக்தி நிலை ஆகியவற்றைக் கடப்பதற்கும் தீட்சைகள் உள்ளன.
இப்பாடலில் அகத்தியர் குறிப்பிடும் தச தீட்சை என்பது வேறொன்றைக் குறிக்கிறது. தமிழில் எழுத்துக்கள் அகாரம் மற்றும் உகாரங்கள் எட்டு மற்றும் இரண்டு என்ற எண்களைக் குறிக்கின்றது. இவற்றின் கூட்டுத்தொகை பத்து என்ற தொகையைத் தருகிறது. இவ்வாறு தச தீட்சை என்பது அகரா உகார தீட்சைகளைக் குறிக்கிறது. இந்த தீட்சை ஒளியுடலைக் கொடுக்கிறது.
அகத்தியர் தனது பாடலை ஆதி அந்தமெய் நிறைந்த தீட்சை மார்க்கம் என்று தொடங்குகிறார். இதற்கு இருவிதத்தில் பொருள் கூறலாம். மெய் என்றால் உடல் என்றும் உண்மை என்றும் இரு பொருள்கள் உள்ளன. தீட்சை மார்க்கம் உடலின் தொடக்கம் முடிவு ஆகிய இரண்டையும் கொண்டது என்று இதனால் ஒரு பொருள் கிட்டுகிறது. மெய் என்பதை உண்மை என்று கொண்டால் அது இறைவனைக் குறிக்கிறது. எதுவொன்று மாறாமல் இருக்கிறதோ அதுவே உண்மை. இன்று ஒன்றாக இருந்து நாளை வேறொன்றானால் அது உண்மையல்ல. இவ்வாறு மாற்றமடையாமல் இருப்பது இறைவன் ஒருவனே. இந்த தீட்சை மார்க்கம் அனைத்துக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருக்கும் உண்மையான இறைவனால் நிறைந்தது என்று இத்தொடருக்கு மற்றொரு பொருள் கிட்டுகிறது. இந்த அகார உகார தீட்சை மார்க்கம் சோதி நிலைக்கானது என்றும் அகத்தியர் கூறுகிறார்.
இப்பாடலில் சோதியின் அந்தம் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர். சோதி என்பது இறைவனின் அருவுருவ நிலை. இறைவன் அருவம், உருவம், அருவுரு என்ற மூன்று நிலைகளில் இருக்கிறார். அருவுரு நிலை முடிவு நிலையல்ல அதையும் கடந்து இறைவனின் அருவ நிலையை ஒரு சாதகர் உணருகிறார். சத்தியம் என்றாலும் மாற்றமற்ற உண்மை என்று பொருள். அந்த சத்தியம் தவறாதவாறு புலத்தியர் எல்லா உண்மைகளையும் அறியவேண்டும் என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.
Comments
Post a Comment