அகத்தியர் ஞானம் - 5.2
அகத்தியர் ஞானம் - 5.2
வாறு கேள் எட்டுரெண்டுங் கூடலாச்சு
வந்துதடா உந்தனுக்கு மகிழ்ந்து பாரு
கூறு கேள் உப்பினிடத்தில் அப்பேயாச்சு
கொடிதான சுருக்கமது காணப்போகா
நீறுகேள் தானத்தை மேவிப் பாரு
நிலைத்துதடா தீக்ஷையது பத்துமாகும்
மாறு கேள்ஓராண்டு செயித்தாயானால்
ஆச்சரியம் உலகமெல்லாம் அவனுள் ஆச்சே
தச தீட்சை என்பது உப்பின் இடத்தில் அப்பு இருப்பது என்று இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர். இங்கு உப்பு என்பது உகாரம், அப்பு என்பது அகாரம். உகாரம் என்பது ஜீவனைக் குறிக்கும். அகாரம் என்பது ஈஸ்வரனைக் குறிக்கும். இவ்வாறு தச தீட்சை என்பது ஜீவன் சிவனாவதைக் குறிக்கிறது. உப்பு நீரில் கலந்தால் இருப்பது நீர் மட்டும்தான், உப்பு தெரிவதில்லை. இவ்வாறு உப்பின் இடத்தில் அப்பு இருக்கிறது. ஜீவன் சிவனானால் இருப்பது சிவன் மட்டுமே ஜீவன் இனி அங்கு இருப்பதில்லை. இதுவே தசதீட்சை. இது நடைபெறும் இடத்தைப் பார்க்குமாறு புலத்தியருக்குக் கூறுகிறார் அகத்தியர். இவ்வாறு ஜீவன் சிவன் ஆவதை ஒருவர் யோகத்தின் சமாதி நிலையில் அனுபவிக்கிறார். இவ்வாறு இந்த சமாதி யோகத்தை ஒருவர் ஒரு ஆண்டு செய்தால் உலகங்கள் அனைத்தும் அவருக்குள் வந்துவிடும், அதாவது அவர் தன்னை அளவுக்குட்பட்ட உடம்பாகக் காணாமல் எங்கும் பரந்திருக்கும் இறைமையாக உணருவார் என்று அகத்தியர் கூறுகிறார்.
Comments
Post a Comment