அகத்தியர் ஞானம் - 5.3
அகத்தியர் ஞானம் - 5.3
ஆச்சென்ற பிண்டமது அண்டம் எல்லாம்
ஆச்சரியம் உன் மௌனம் என்ன சொல்வேன்
வாச்சென்ற அண்டத்தை நோக்கிப் பாரு
வாருதிபோல் ரவிமதியுந் தோணும் தோணும்
நீச்சென்ற குரு தீக்ஷைக் குள்ளே புக்கி
நிலைச்சுதடா காயமதில் அருவமில்லை
ஓச்சென்ற வாயுவெல்லாமதி ரவியிற் புக்கி
அடங்கிற்று பார்த்துக்கோ உள்ளம் தானே.
இப்பாடலில் அகத்தியர் ஆக்ஞா சக்கரத்தில் நிலவும் நிலையைக் குறித்துப் பேசுகிறார். தசதீட்சை எனப்படும் அகார உகார தீட்சைகளை அடுத்து ஒரு சாதகன் குரு தீட்சையைப் பெறுகிறான். குரு என்றால் இருட்டை விலக்குவது. இங்கு அளவுக்குட்பட்டதாக எண்ணும் எண்ணத்தைத் தரும் திரைகளை நீக்குவதே குரு தீட்சை எனப்படுகிறது. குரு தீட்சியைப் பெறும் ஒரு யோகி தான் எங்கும் நிறைந்திருப்பதைக் காண்கிறார். பிண்டமாக இருக்கும் தானே அண்டமாக இருப்பதையும் உணருகிறார். இதுவே மோன நிலை. சக்தி நிலை. இதை ஆக்ஞாவில் அனுபவிக்கலாம்.
இதனை அடுத்து அகத்தியர் ரவி மதி என்ற இரண்டைப் பற்றிப் பேசுகிறார். பொதுவாக ரவி மதி என்பது சூரியனையும் சந்திரனையும் குறிக்கும். இது பிங்கலை,இடை நாடிகளையும், வலது மற்றும் இடது கண்களையும் குறிக்கும். குரு நிலையை அடை யும் யோகி என்றும் அழியாத உடலைப் பெறுகிறார் என்கிறார் அகத்தியர். அவர் இங்கு பருப்பொருளால் ஆன உடலைக் குறிக்கவில்லை.
திருமூலர் தனது திருமந்திரத்தில் ஐவிதமான உடல்களைக் குறிப்பிடுகிறார். அவை ஸ்தூல, சூட்சும, அதி சூட்சும, காரண, மகா காரண சரீரம் என்ற ஐந்துமாகும். இவற்றில் ஸ்தூல உடல் மட்டுமே பருப்பொருளால் ஆனது, அழிவுக்குட்பட்டது. இவ்வாறு அகத்தியர் அழிவற்ற மகா காரண சரீரத்தைப் பற்றிப் பேசுகிறார். இதுவே அண்டத்தை உள்ளடக்கிய சரீரம், அனைத்துக்கும், உருவு, அருவு, உருவருவு என்ற மூன்று நிலைகளுக்கும் முற்பட்டது. இந்த குருநிலையில் அந்த யோகியின் வாயுக்கள் ரவி மதியைச் சேருகின்றன என்கிறார் அகத்தியர்.
நமது உடலில் பத்துவித வாயுக்கள், ஐந்து முக்கியமானவை- பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்பவையும் ஐந்து துணை வாயுக்கள்- நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன் மற்றும் தனஞ்சயன் என்ற ஐந்தும் உள்ளன. இவை உடலில் பல்வேறு தொழில்களைச் செய்கின்றன, உடல் அழிவதற்கும் காரணமாக இருக்கின்றன. இவையனைத்தும் இடை பிங்கலை நாடிகளை சேர்கின்றன அதாவது உடல் அழிவற்ற நிலைக்குச் செல்கிறது என்கிறார் அகத்தியர். இந்த நிலையை அகத்தியர் “உள்ளம்” என்கிறார். இந்த சொல்லை உள்+அம் என்று பிரித்தால் உள்ளே சக்தி நிலையில் இருக்கும் வஸ்து, இறைவன் என்ற பொருளைத் தருகிறது.
ஹ்ருதயம் என்ற ஒரு தத்துவத்தைப் பற்றி உபநிடதங்களும் ரிக் வேதமும் பேசுகின்றன. இந்த ஹ்ருதயம் என்பது நமது உடலில் உள்ள ஒரு பகுதி அல்ல. இதை பிருஹத் ஆரண்யக உபநிஷத் எல்லா திசைகளிலும் பரவும் தெய்வங்கள் தோன்றும் இடம் என்றும் பிரம்மன் என்று அழைக்கின்றது. அகத்தியர் கூறும் உள்ளம் இந்த ஹ்ருதயம் ஆகும்.
Comments
Post a Comment