அகத்தியர் ஞானம் - 5.5


அகத்தியர் ஞானம் - 5.5


என்றனவே பொருளதுவாய் ரவியிற் புக்கும்
எடுத்துரைக்கப் போகாது என்ன சொல்வேன்
நன்றெனவே வகையைந்து பாட்டுக்கு
நான்முகத்தோன் சொல்லிவிட்டோம் நயந்து பாரு
நன்றான பொருளிதுதான் உற்றுப் பாரு
ஓகோகோ என்ன சொல்வேன் உகமாய் அன்றே
இன்றேதான் புதுமையிது இந்த எழுத்தைக் காணார்
ஈப்பட்ட தேனதுபோல் இகழ்ந்த வாறே


பொருள்கள் அனைத்தும் ரவியினுள் புகும் என்று அகத்தியர் இப்பாடலைத் தொடங்குகிறார். இங்கு பொருள்கள் என்பது எல்லா தத்துவங்களும் ஆகும். இவை ஐந்தைந்தாக குறிக்கப்படுகின்றன. 


ஐம்பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், இந்திரியங்கள், வாயுக்கள் என்று ஐந்தாக இருக்கும் இவை ஒருமை நிலையை அடைவதை அகத்தியர் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்று என்கிறார், நான்முகனைச் சொன்னோம் என்று அகத்தியர் குறிப்பிடுவது நான்கு உணர்வு நிலைகளைக் குறிக்கும். பொதுவாக நான்முகன் என்று சித்தர்கள் குறிப்பிடுவது சதாசிவனை. அவர் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம் மற்றும் தத் புருஷம் என்ற ஐந்து முகங்களை உடையவர். இவற்றில் சத்யோஜாதம் மேல் நோக்கிய முகம். அதை நாம் பார்க்க முடியாது. நான்கு முகங்கள் தான் சித்தர்களுக்குத் தென்படுபவை. அதனால் அகத்தியர் தான் நான்முகனைப் பாடுவதாகச் சொல்கிறார். நாம் எந்த ஒரு தெய்வத்துக்குப் பூஜை செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வது சதாசிவன்தான். அவரே அனைத்து தெய்வங்களையும் உள்ளடக்கியவர். புலப்படும் அவரது நான்கு முகங்கள் விழிப்பு, கனவு, ஆழுறக்கம் மற்றும் துரியம் என்ற நான்கு உணர்வு நிலைகளைக் குறிக்கும். ஐந்தாவது முகம் துரியாதீதம் எனப்படும் நிலையைக் குறிக்கும்.


இவற்றைக் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்ளுமாறு அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார். இதை ஒரு உவமையால் விளக்க முடியாது ஏனெனில் இதைப் போன்ற ஒரு வழிமுறை வேறெங்கும் இல்லை. இது புதுமையானது. அனால் ஒப்பற்றது என்கிறார் அகத்தியர். ஆனால் இதைப் புரிந்துகொள்ளாத சிலர் தேன் பட்ட ஈயைப் போல இதை இகழ்ந்து பேசுவர் என்கிறார் அவர். தேனில் விழுந்த ஈக்கு அந்த தேனின் சுவை தெரிவதில்லை, அது தன்னைக் கொல்லப்போகிறது என்றே அது எண்ணுகிறது. அதேபோல் குண்டலினி யோகத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் அது ஆபத்தானது, மரணத்தை அழிப்பது என்று இகழ்ந்து பேசுவர் என்கிறார் அகத்தியர்.

Comments

Popular posts from this blog

தச வாயுக்களும் அதன் பணிகளும்

சுவாசம்

கற்பம் (அகம்)